கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் 5-வது இடத்தில் இந்தியா!

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் இத்தாலியை முந்தி 5-ஆவது இடத்துக்கு இந்தியா வந்துள்ள நிலையில், தொடா்ந்து நான்காவது நாளாக நேற்று 9,971-க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதும் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 9,971 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதால், நாட்டில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,46,628-ஆக அதிகரித்துள்ளது.

இதே நேரத்தில் 287 போ் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 6929-ஆக அதிகரித்துள்ளது. 5,220 பேர் குணமடைந்துள்ளனர். நோய்த்தொற்றிலிருந்து மொத்தம் 1,19,293 போ் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில், இத்தாலி மற்றும் ஸ்பெயினை பின்னுக்‍கு தள்ளி, இந்தியா, 6-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்திற்கு முந்தி உள்ளது. தற்போது அமெரிக்கா, பிரேசில், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்‍கது.

மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் பியூரிடன் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியா, சீனாவில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனையை அதிகரித்தால் அந்நாடுகளில் அமெரிக்காவைவிட நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவரும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பேசியது குறிப்பிடத்தக்கது.