சீனாவில் இருந்து இந்தியாவிற்கு 600 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, “சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்திற்கு காரணம் என்றாலும் இந்தியாவிலும் அந்த தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த கொரோனவை பொறுத்தவரை பறவை மற்றும் விலங்குகள் மூலம் இது பரவியதாக சீன அரசு கூறுகிறது. ஆனால் அது முற்றிலும் பொய்யான தகவல். அந்நாட்டின் உயிரி ஆயுதமாகவே இது பரப்பட்டிருக்கிறது. இதுதான் நிதர்சனம்.

இது பற்றி சர்வதேச நீதிமன்றம் தான் ஆய்வு செய்ய வேண்டும். இந்த வைரஸால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவை ஈடுகட்ட சீனாவில் இருந்து 600 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக கேட்டு சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர வேண்டும். அதற்கு உச்சநீதிமன்றம் இந்திய அரசுக்கு வழக்கு தொடர உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.