கொரோனாவை கட்டுப்படுத்தும் சுகாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது இந்தியா

உலக வல்லரசாக இருந்த நாடுகளை எல்லாம் தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது கொரோனா வைரஸ். நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் பலி, பெருகும் நோயாளிகளால் திணறும் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் முடங்கிய வர்த்தகங்கள் என, மேற்கத்திய நாடுகள் ஸ்தம்பித்து வருகின்றன.

மனிதகுலத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸிற்கான மருந்தைக் கண்டுப்பிடிக்கும் ஆய்வில் மூழ்கியுள்ளனர், ஆராய்ச்சியாளர்கள். அதுவரை தற்காலிகமாக கொரோனாவை கட்டுப்படுத்த ஹிட்ராக்ஸி கிளோரோகுய்ன் (Hydroxy Chloroquine) என்ற மருந்தை பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மலேரியா, மூட்டுவலிக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனாவை கட்டுப்படுத்தமுடியுமா என்று வல்லுநர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

அதேநேரம் உலகெங்கும் பாதிக்கப்பட்டிருக்கும் கொரோனா தொற்று நோயாளிகள் இதை பயன்படுத்தி குணமானதாக கூறப்படுகிறது. இதை உணர்ந்து கொரோனாவால் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளவர்களுக்கு ஹிட்ராக்ஸி கிளோரோகுய்ன் (Hydroxy Chloroquine) மருந்தை அளிக்கலாம் என உலக நாடுகளிடம் அறிவுறுத்தியது அமெரிக்கா.

இதைத்தொடர்ந்து, இந்த மருந்துக்கு பல நாடுகளில் கடும் தேவை ஏற்பட்டுள்ளது. உலகளவில் இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது இந்தியா. ஆனால் இம்மருந்து பற்றிய தகவல் வெளியானதுமே இந்தியாவிலும் இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மார்ச் 25ம் தேதி தடை விதித்தது மத்திய அரசு.

ஆனால் இந்த தடை விதிக்கப்படுவதற்கு முன்பே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள், மருந்தை பெறுவதற்கு கொள்முதல் ஆணை பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே பெற்ற அனுமதியின்படி, ஹிட்ராக்ஸி கிளோரோகுய்ன் (Hydroxy Chloroquine) மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி அமெரிக்காவுக்கு மருந்துகள் தர வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து மத்திய அரசு பரிசீலிப்பதற்குள் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 லட்சத்தை நெருங்கியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலைமை கைமீறி போவதை அறிந்த டோனால்டு டிரம்ப், ஹிட்ராக்ஸி கிளோரோகுய்ன் (Hydroxy Chloroquine) மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை என்றால், நிச்சயம் அமெரிக்க எதிர்வினையாற்றும் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஹிட்ராக்ஸி கிளோரோகுய்ன் (Hydroxy Chloroquine) மருந்திற்கான ஏற்றுமதி தடையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதன்மூலம் அமெரிக்க மட்டுமல்லாமல் இந்தியாவை சார்ந்திருக்கும் நாடுகள், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும், இதனை ஏற்றுமதி செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.

காரணம், இம்கா(IMCA) மற்றும் கேடிலா(Cadila) எனப்படும் இரு மருந்து நிறுவனங்கள், இந்தியாவில் மாதத்திற்கு சுமார் 20கோடி ஹிட்ராக்ஸி கிளோரோகுய்ன் (Hydroxy Chloroquine) மருந்துகளை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது. இவர்களிடமிருந்து 10கோடி மாத்திரைகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் மீதமுள்ள 10கோடி மாத்திரைகளை மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்யவுள்ளது. உலகமே கொரோனாவுக்காக போராடிவரும் இந்த சூழலில், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவும் சுகாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது இந்தியா.