“வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை வேண்டும்!”

கொரோனா அதிகமாக பரவி வரும் சூழலில் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிடுவதற்கான நடவடிக்கைகளையும் பிரதான செயல்திட்டத்தில் ஒன்றாகத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு மேற்கொண்டுள்ள ‘வந்தே பாரத்’ நடவடிக்கையின் கீழ், வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஊர் திரும்புவது ஏற்கெனவே தொடங்கிவிட்டபோதிலும், தமிழகம் அதில் உரிய முன்னுரிமையைப் பெற பேச வேண்டியிருக்கிறது.

மே 7 அன்று தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ நடவடிக்கையின் முதல் கட்டத்தில் 12 நாடுகளிலிருந்தும், இரண்டாம் கட்டத்தில் 31 நாடுகளிலிருந்தும் என்று மொத்தம் 44,800 இந்தியர்கள் நாடு திரும்பினர். தமிழகத்தைப் பொறுத்த அளவில் அமெரிக்கா, மலேசியா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், வளைகுடா நாடுகளிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் வந்திருக்கிறார்கள்.

ஏனைய நாடுகளில் இருப்பவர்கள் தவிப்பிலேயே இருக்கிறார்கள். மேலதிகம் இந்திய அரசு சில நாடுகளுக்கு இயக்கும் விமானச் சேவைகளிலும் தமிழகம் போதிய கவனத்தைப் பெறவில்லை. ஓர் உதாரணம், பிரிட்டன். மஹாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், டெல்லி ஆகியவற்றுக்கு பிரிட்டனிலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டாலும் தமிழகத்துக்கு ஒரே ஒரு விமானம் மட்டுமே இதுவரை இயக்கப்பட்டது.

ஜூன் 11-ல் தொடங்கும் ‘வந்தே பாரத்’ மூன்றாம் கட்ட நடவடிக்கையிலும் பிரிட்டனிலிருந்து புறப்படும் ஐந்து விமானங்களில் ஒன்றுகூட தமிழகத்துக்குத் திட்டமிடப்படவில்லை. ஆனால், பிரிட்டனிலிருந்து மட்டும் உடடினயாகத் தமிழகம் திரும்ப சில நூறு பேர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்துக் காத்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் கொரோனாவின் காரணமாக வேலையை இழந்து கைச்செலவுக்கும் பணமில்லாதவர்கள், சொந்த ஊருக்கே திரும்பிவிடும்படியும், இணையம் வழியாகப் பாடங்களைப் படித்துக்கொள்ளும்படியும் கல்வி நிறுவனங்களால் கேட்டுக்கொள்ளப்பட்ட மாணவர்கள்.

வெவ்வேறு தேவைகளுக்காகக் குறுகிய காலத் திட்டங்களோடு சென்று வெளிநாடுகளிலேயே சிக்கிக்கொண்டிருப்பவர்கள், இவர்களில் உடனடி மருத்துவ உதவிகளைப் பெற வேண்டியிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், வயோதிகர்கள் என்று இப்படிக் காத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் கஷ்டங்களைச் சுமந்திருப்பவர்கள். இந்தியத் தூதரகத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்துப் பலனில்லாத நிலையில் தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் செய்திகளையும் நாம் அறிய முடிகிறது.

அது அமெரிக்காவோ ஐரோப்பாவோ, தொற்று அங்கு பரவ வேகம் எடுக்க எடுக்கப் பல நாடுகள் உடனடியாக விமானங்களை அனுப்பி, தம் குடிமக்களைப் பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் முயற்சியில் இறங்கின. இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகவும் தாமதமாகவே தொடங்கியது. அது முழுமையான அளவில் நடக்க மாநில அரசுகள் அழுத்தம் தருவது அவசியம்.