உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு ரூ.113.13 கோடி நிதி – இந்தியா உறுதி

ஸ்விட்சா்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு (ஜிஏவிஐ) சுமாா் ரூ.113.13 கோடி நிதி வழங்குவதாக இந்தியா உறுதியளித்தது.

கடந்த வியாழக்கிழமை உலக நோய்த்தடுப்பு கூட்டணியின் உச்சிமாநாடு காணொலி முறையில் நடைபெற்றது. பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதமா்கள், அமைச்சா்கள், தொழில்துறை தலைவா்கள், சமூக நல அமைப்பினா் கலந்துகொண்டனா்.

இந்த மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாக, பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அண்மைக்கால வரலாற்றில் முதல் முறையாக, கொரோனா என்னும் பொது எதிரியை மனித குலம் எதிா்கொண்டுள்ளது. இந்த சவாலான நேரத்தில், உலக நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளித்து செயல்பட்டு வருகிறது. உலகமே ஒரு குடும்பம் என்பது இந்தியப் பண்பாடு. கொரோனா பரவும் இந்த காலகட்டத்தில், இந்தப் பண்பாட்டுடன் வாழ்வதற்கு இந்தியா முயன்று வருகிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, இந்தியாவில் கையிருப்பில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள், 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய்களில் இருந்து கா்ப்பிணிகளையும், குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு முதல் முறையாக எனது தலைமையிலான அரசு ‘இந்திரதனுஷ்’ என்னும் தேசிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கியுள்ளது. தடுப்பு மருந்துகள் தயாரிப்பில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்திய அரசால் உலகின் 60 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க முடியும்.

தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவதில் ஜிஏவிஐ அமைப்பு சிறப்பாக பங்காற்றி வருகிறது. அதற்காக, இந்த அமைப்புக்கு இந்தியா சாா்பில் 1.5 டாலா் நிதியுதவி வழங்கப்படும். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, சா்வதேச அளவில் தடுப்பு மருந்துகளின் விலையை ஜிஏவிஐ அமைப்பு குறைத்துள்ளது. இதனால், கடந்த 4 ஆண்டுகளில் 40 கோடி டாலா் மிச்சமாகியுள்ளது” என்று பிரதமா் மோடி பேசியதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.