“இந்தியாவை போல் நாங்களும் குடியுரிமை சட்டம் கொண்டுவந்தால் நிலைமை என்னவாகும்” – மலேசிய பிரதமர்..!

If we do that CAA here, you know what will happen - says Mahathir Mohamad

மலேசியப் பிரதமர் மீண்டும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை பெறுவதை துரிதப்படுத்தவே இந்தச் சட்டத்திருத்தம் உதவும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மலேசியப் பிரதமர் மகாதீர், மாநாட்டின் இரண்டாம் நாளன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் .

இதுகுறித்து மகாதீர் கூறுகையில், “மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோன்றதொரு நடவடிக்கையை இங்கு (மலேசியா) மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். எங்கும் குழப்பம், ஸ்திரமின்மை நிலவும். அனைவரும் பாதிக்கப்படுவர்,” என்றார்.

மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் அனைத்துக் குடிமக்களும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். கூடுதலாக, மலேசியாவில் பிற இனத்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“சுமார் 70 ஆண்டுகளாக இந்தியக் குடிமக்கள் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?” என்று மகாதீர் கேள்வி எழுப்பினார்.

அண்மைய சில மாதங்களில் இந்தியாவுடன் தொடர்புடைய பதற்றமான விவகாரங்கள் குறித்து இரண்டாவது முறையாக மகாதீர் தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்து, இந்திய தரப்புக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மலேசியப் பிரதமர் இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக, பிரதமர் மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “அது அவர்களுடைய கருத்து. நான் தெரிவித்தது என்னுடைய கருத்து. எதை நம்ப வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள்தான் ஊடகம்,” என்றார் மலேசியப் பிரதமர் மகாதீர்.

Source : BBC