வந்தே பாரத் திட்டத்தின்கீழ் தமிழகம் வருவோருக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை – நவாஸ் கனி கருத்து

“வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை, உடனடியாக மத்திய அரசு பரிசீலனை செய்து மாநில அரசுகளின் மூலம் வழங்க வேண்டும்” என ராமநாதபுரம் லோக்சபா உறுப்பினர் நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசின் ஒப்புதலோடு பல்வேறு சிறப்பு விமானங்கள் வந்தே பாரத் எனும் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் மூலம் அழைத்து வரப்படும் பயணிகளுக்கு விமான டிக்கெட் மருத்துவ பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்கு மாநில அரசு சார்பில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் மூலம் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு 174 பயணிகள் பயணம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் அவர்கள் தங்குவதற்கான இருப்பிட வசதி உணவு மருத்துவ பரிசோதனை கட்டணங்கள் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் மாவட்டச் செயலாளர் ஹபீப் ரகுமான் ஆகியோர் செய்திருந்தனர்.

பின்னர், ராமநாதபுரம் லோக்சபா உறுப்பினர் நவாஸ்கனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் தனியார் ஏற்பாடுகளில் இந்தியாவிற்குள் வரும் பயணிகளுக்கு வழங்கப்படுவதில்லை.

வெளிநாட்டில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அனைவரும் பெரும் தொற்று காரணமாக இந்தியாவிற்குள் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை, அதனை உடனடியாக மத்திய அரசு பரிசீலனை செய்து மாநில அரசுகளின் மூலம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.