கொரோனா பரவலால் வெளிநாடுகளில் வேலை செய்துவந்தோர் சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் திரும்பி வருகின்றனர். இவர்களில் நல்ல வேலையில் இருப்போர் பலரும் முன்பே தாய்நாடு திரும்பிவிட்டனர். நடுத்தர, விளிம்புநிலைத் தொழிலாளர்கள் கையில் பணமே இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து, சொந்த ஊர்களுக்குத் திரும்பிவரும் சம்பவங்கள் வேதனை அடைய வைத்துள்ளன.
குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு வெளிநாட்டு வேலைக்கு விரும்பிச் செல்வோரை இரண்டு வகைப்படுத்தலாம். நன்கு படித்து, தங்கள் கல்வித் திறனுக்கு ஏற்ற வேலைக்குச் செல்வோர் ஒருரகம். கட்டிட வேலை, ஓட்டுநர் பணி, தச்சு வேலை என கூலிப்பணியாளர்களாகச் செல்வோர் மற்றொரு ரகம்.
உள்ளூரில் தொடர்ச்சியாக வேலை இல்லாத சூழலிலும், வெளிநாட்டில் கொஞ்சம் கூடுதலாகச் சம்பளம் கிடைக்கும் என்பதாலும் விளிம்பு நிலை, நடுத்தர வர்க்கத்தில் இந்தத் தொழில் செய்யும் பலரும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இப்போது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக பெரும்பாலான நாடுகள் முடங்கியிருக்கின்றன. இதில் அன்றாடப் பணிக்காக வெளிநாடு சென்றோர் கடந்த மூன்று மாதங்களாகவே அங்கு பணி இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் பணிசெய்த நிறுவனங்களே விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகின்றன.
ஏற்கெனவே மூன்று மாத சம்பளத்தை இழந்து, நிறுவனங்கள் தரப்பில் கொடுத்த உணவை மட்டுமே சாப்பிட்டுவந்த இவர்கள் இப்போது நிறுவனங்கள் எடுத்துக் கொடுத்த டிக்கெட்டின் மூலமே சொந்த ஊருக்குத் திரும்பி இருக்கிறார்கள். கேரளத்தின் எர்ணாகுளம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கும் தமிழர்களையும் தமிழக எல்லைப்பகுதியான களியக்காவிளை வரை கேரள அரசே வாகனங்களில் அழைத்துக் கொண்டுவந்து இறக்கி விடுகிறது.
ஆனால் இவர்கள் தமிழக எல்லைக்குள் வந்துவிட்டாலும் இ-பாஸ் விண்ணப்பித்தே குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இ-பாஸ் கிடைக்க அதிகபட்சம் ஒருநாள் வரை ஆகிறது. வெளிநாட்டில் இருந்து திரும்புவோருக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் உடனடியாக இ-பாஸ் வழங்க தாசில்தார் நிலையில் உள்ள அதிகாரி எப்போதும் பணியில் உள்ளார்.
அதேநேரம் இ- பாஸ் பெற்று கொரோனா பரிசோதனைக் கூடத்துக்கு அழைத்துச் செல்லவும், பரிசோதனை முடிந்தபின் கல்லூரிகளில் 7 நாள்கள் தனிமைப்படுத்தும் இடத்துக்குக் கொண்டு சென்று விடவும் குமரி மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதி செய்துள்ளது.
இந்தப் பேருந்தில் நபர் ஒன்றுக்கு 60 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு, தமிழக எல்லை வரை இலவசமாகவே அழைத்துவந்து விடும் நிலையில் சொந்த மாவட்டத்திலேயே 60 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து அழைத்துச் செல்வது வேதனையளிக்கிறது என்கின்றனர் திரும்பியவர்கள்.
இதுகுறித்து ஒரு பயணி கூறுகையில், “வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு 60 ரூபாய்கூட இல்லையா எனப் பலர் நினைப்பார்கள். நாங்கள் இதற்கு முன்பு வந்த சூழல் வேறு. இப்போது வந்திருக்கும் சூழல் வேறு. நான் சாதாரண எலக்ட்ரீசியன் வேலைக்குத்தான் சென்றேன். மூன்று மாதங்களாக வேலை இல்லை.
என்னைப் பணிக்கு அமர்த்திய கம்பெனி மூன்று மாதமும் சாப்பாடு மட்டும் போட்டார்கள். கிளம்புவதற்கு விமான டிக்கெட் போட்டுக் கொடுத்து நம் ஊர்ப் பணத்துக்கு 150 ரூபாயும் தந்தார்கள். விமானம் தாமதமாக வந்ததால் ஒரு ஆப்பிளும், பர்கரும் விமான நிறுவனம் தந்தது.
அதைச் சாப்பிட்டுவிட்டு கேரள அரசின் புண்ணியத்தால் கட்டணமில்லாப் பயணத்தில் தமிழக எல்லை வரை வந்துவிட்டேன். இங்கே எந்த வசதியும் இல்லை. தண்ணீர் பாட்டில் 20 ரூபாய். எதிரிலே சப்பாத்தி போடுகிறார்கள். அதைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.
தண்ணீரோ, சப்பாத்தியோ சாப்பிட்டுவிட்டால் பேருந்தில் 60 ரூபாய் டிக்கெட் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யும் இடத்துக்குப் போக முடியாது. வெளிநாட்டு வாழ்க்கை என்றுதான் மதிப்பிடுகிறார்களே தவிர, அங்கு என்ன பணி செய்தோம், இப்போது எவ்வளவு சிரமங்களுக்கு இடையே இங்கு திரும்புகிறோம் என்பதெல்லாம் இங்கிருப்பவர்களுக்குத் தெரிவதில்லை” என ஆதங்கப்பட்டார்.
இதேபோல் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் நபர்கள் சேர்ந்த பின்புதான் பேருந்து வசதி அமைத்துக் கொடுக்கப்படுவதால் உடனுக்குடன் செல்ல முடியாமல் பசியோடும் பலர் முகாமில் இருக்கின்றனர்.
அரசு இவ்விஷயத்தைக் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சில தினங்களுக்கு முன்பு, களியக்காவிளையில் அடிப்படை வசதிகள் இல்லை என ராணுவத்தில் இருந்து ஊர் திரும்பியவர்கள் போராடியது குறிப்பிடத்தக்கது.