கடந்த செப்டம்பர் மாதம் தமிழக இளைஞர்கள் பலரின் நிம்மதியையும், கனவையும் கலைத்த செய்தி இது. வாழ்க்கையில் எப்படியாவது மேலே எழும்பி வந்துவிட மாட்டோமா என்று ஒவ்வொரு தினமும் ஏங்குவது என்பது உண்மையில் ஒரு சாபம் தான். வறுமை, குடும்பம், பொறுப்பு, குடும்பத்தின் ஒரே மகன் என்று நம் இளைஞர்கள் தங்கள் தோளில் சுமக்கும் பாரத்தை எடுத்துரைக்க வார்த்தைகளே இல்லை. அதிலும், மூத்தப் பிள்ளை என்பவர், அத்தனை ஆசைகளையும் மனதிலேயே வைத்து புதைத்துவிட்டு, குடும்பத்திற்காகவும், குடும்பத்தினருக்காகவும் மட்டுமே வாழ்வது என்பது அதைவிட பெரிய சாபம் தான்.
ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், சொந்த பந்தங்களை பிரிந்து, பெற்றோர்களை பிரிந்து, மனைவி பிள்ளைகளைப் பிரிந்து, குறிப்பாக நெருங்கிய நண்பர்களைப் பிரிந்து வாழ்ந்து, சம்பாதித்து தனது குடும்பத்தை இந்த சமூகத்தில் ஒரு நிலையான அந்தஸ்த்திற்கு கொண்டு வந்தே தீருவதில் தீர்க்கமாக இருக்கும் இளைஞர்களுக்கு எப்போதும் ராயல் சல்யூட் அடிக்கலாம்.
ஆனால், அதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை, கேவலம் பணத்திற்காக சூறையாடினால், அது நிச்சயம் கொடுமை தானே. அப்படியொரு சம்பவம் தமிழக தலைநகர் சென்னையை கடந்த மாதம் உலுக்கியது.
இளைஞர்கள் எந்தளவுக்கு உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கே இந்த தவிர்க்க முடியா பகிர்வு,
சென்னை ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, அஜிஸ்முல்க் தெருவில் ‘இ – ஜாப்ஸ்’ என்ற பெயரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டுவந்தது. இந்த நிறுவனம் சார்பில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தருகிறோம் என ஆன் லைனில் விளம்பரம் செய்யப்பட்டது. வெளிநாட்டு வேலை என்ற கனவோடு காத்திருந்தவர்கள் இந்த நிறுவனத்தை அணுகினர். அவர்களிடம் நிறுவனத்தின் ஹெச்.ஆர் ஆன அருணா ஹன்சிகா என்பவர் வெளிநாட்டு வேலைக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கூறினார்.
பாஸ்போர்ட்டுடன் விண்ணப்பித்தவர்களிடம் விசா செலவுக்காக 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பணத்தைச் செலுத்திவிட்டு காத்திருந்தவர்களுக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி இ-ஜாப்ஸ் நிறுவனம் மூடப்பட்ட தகவல் தெரிந்ததும் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் 44 பேர் ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஹெச்.ஆர் அருணாவிடம் போனில் பேசினார்கள். அப்போது அவர், `எங்களுக்கும் பிரஷர் இருக்கிறது. ஆபீஸ் அங்குதான் செயல்படுகிறது. வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லையென்றால் பணத்தை திரும்பத் தந்துவிடுவோம்’ என்று கூறியுள்ளார். அதன்பிறகு அருணாவும், இ-ஜாப்ஸ் நிறுவனத்தை நடத்திய நிருபன் சக்கரவர்த்தியும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் அருணா, இருக்கும் இடம் போலீஸாருக்குத் தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் அருணாவிடம் விசாரித்தனர். பிறகு, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட அருணாவிடம் பணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறிய தகவல்களை போலீஸார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
அருணா அளித்த வாக்குமூலத்தில், “நான், ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் குடும்பத்தோடு குடியிருந்துவருகிறேன். இ-ஜாப்ஸ் நிறுவனத்தில் ஹெச்.ஆர் பணிக்காக சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தேன். மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் அங்கு வேலைக்குச் சேர்ந்தேன். ஹெச்.ஆர் பதவி என்பதால் வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம் போனிலும் நேரிலும் இன்டர்வியூ செய்தேன். அப்போது அவர்கள் விசா செலவுக்காக பணம் செலுத்தினர். அந்தப் பணம் என்னிடம் இல்லை.
வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் போலவே இ-ஜாப்ஸ் நிறுவனமும் செயல்பட்டது. பாஸ்போர்ட்டுடன் வருபவர்களின் கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்ப்போம். பிறகு, அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று வேலை பார்க்க விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டறிவோம். எங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் நம்பும்படி இருக்கும். இதனால் இ-ஜாப்ஸ் நிறுவனத்தை நம்பி விசாவுக்காக நாங்கள் கூறும் தொகையைச் செலுத்தினார்கள். பிறகு மெடிக்கல் டெஸ்ட் நடத்தப்படும். அதன்பிறகுதான் அனுமதி கடிதங்களை கொடுப்போம். பணத்தைக் கொடுத்தவர்களின் நெருக்கடியால் அலுவலகத்தை மூடிவிட்டோம்” என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில், “இ-ஜாப்ஸ் நிறுவனத்திலிருந்து எங்களிடம் போனில் பேசிய அருணா, விசா செலவுக்காக பணம் கேட்டார். அதை அவர்கள் கூறிய அக்கவுன்ட்டில் செலுத்தினோம். பிறகு, சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரக முத்திரையுடன் எங்களுக்கு கடிதம் ஒன்றைத் தந்தனர். மெடிக்கல் டெஸ்ட்டும் நடத்தப்பட்டது. இ-ஜாப்ஸ் நிறுவனம் சார்பில் அனுமதி கடிதமும் வழங்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனம் எங்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்க சென்றபோதுதான் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அதுகுறித்து விசாரித்தபோதுதான் எங்களை நம்ப வைத்து ஏமாற்றியது தெரியவந்தது. எங்களிடம் இ-ஜாப்ஸ் நிறுவனம் கொடுத்த அனுமதி கடிதங்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிந்தது. பணத்தை இழந்ததோடு நம்பிக்கை மோசடி செய்த இ-ஜாப்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் கொடுத்தோம். அருணாவிடம் கேட்டபோது அவர் பணத்தை திரும்பத் தந்துவிடுவதாகக் கூறினார். எங்களைப் போல பலர் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்” என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆயிரம் விளக்கு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை சென்னையைச் சேர்ந்த நிருபன் சக்கரவர்த்தி என்பவர் நடத்திவந்துள்ளார். இந்த நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆக வேலை பார்த்தவர் அருணா ஹன்சிகா. இவர்கள் இருவரும் சேர்ந்துதான் ஏமாற்றியுள்ளனர். அருணாவை கைது செய்துவிட்டோம். நிருபன் சக்கரவர்த்தியைத் தேடிவருகிறோம். இதுவரை 44 பேர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அவர்களிடமிருந்து 25 லட்சம் ரூபாய் வரை வாங்கி ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.
எவ்வளவு பக்காவாக இளைஞர்களிடம் மெடிக்கல் டெஸ்ட் எல்லாம் நடத்தி வேலைக்கு தேர்வு செய்வது போல் நடித்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஒரு ஏஜென்சியை நாடுகிறோம் என்றால், அவர்கள் காட்டும் பம்மாத்தை வைத்து அவர்களை நம்பி பணம் செலுத்துவது என்பது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.