மனதை உருக்கும் விபத்து – தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக்கு நடந்த சோகம்!

கொல்கத்தாவின் மேற்கு வங்கத்தில் ஜல்பாய்குரி மாவட்டத்தில் இன்டர்சிட்டி ரயில் மோதி படுகாயமடைந்த யானை ஒன்று நடக்க முடியாமல் தவழ்ந்து சென்ற காட்சி காண்போர் மனதை உருக வைத்துள்ளது.

தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று சில்குரியில் இருந்து துப்ரி செல்லும் பயணிகள் ரயில்களில் மோதியது. ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தும் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது. தண்டவாளத்தில் யானை சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடம்பில் ஆங்காங்கே சிராய்ப்புகள் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. ரயிலின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. ரயில் நிறுத்தப்பட்டதையடுத்து பயணிகள் யானையை நோக்கி வந்தனர். ஆனால் அவர்களால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. உடனடியாக வனத்துறை இதுகுறித்து தெரிவித்தனர். அங்கிருந்த சிலர் காயமடைந்த யானை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். வனத்துறை மற்றும் மத்திய அமைச்சர்களை டேக் செய்து இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிட்டனர்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

அந்த வீடியோவில், யானை மிகவும் சிரமப்பட்டு தண்டவாளத்தில் இருந்து வெளியேறுகிறது. அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. பல்வேறு சிரமங்களுக்கு பிறகு மெல்ல எழுந்து நிற்கிறது. ஆனால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே சரிந்து விழுந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கிருந்து எழுந்து காட்டு பகுதிக்குள் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர். வனத்துறை அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். வனத்துறை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். ரயில் மோதியதில் உள்காயம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.