சென்னையில் 506 விமான சேவைகள் முற்றிலும் ரத்து; சிங்கப்பூரிலிருந்து சரக்கு விமானம் இயக்கம்..!

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது. இதில் விமான சேவைகளுக்கு கடந்த 22ஆம் தேதியிலிருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதனை தொடர்ந்து இந்திய நாட்டின் உள்நாட்டு விமானசேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவை முற்றிலுமாக முடங்கியது. இதை வருகை 57, புறப்பாடு 57 என மொத்தம் 114 விமானசேவைகள் கடந்த 22-ந் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட்டதாக தமிழக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், சென்னையில் இருந்து புறப்படும் 196 விமானங்கள், வருகை தரும் 196 விமானங்கள் என மொத்தம் 392 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு இயக்கப்பட்ட 506 பயணிகள் விமானசேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், சென்னை பழைய விமானநிலையத்தில் சரக்கு விமானங்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி (மார்ச் 25) நள்ளிரவு 12.30 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து கேத்தேபசிபிக் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 3 மணிக்கு பெங்களூர் புறப்பட்டு சென்றது.

அதனை தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் அதிகாலை 5 மணிக்கும், மஸ்கட்டிலிருந்து ஓமன் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் காலை 6.30 மணிக்கும் சென்னை பழைய விமானநிலையம் வந்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.