COVID-19; சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய பெண்; பொதுமக்கள் புகார் – போலீசார் எச்சரிக்கை..!

தமிழகம்: சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடி வந்து, அப்பகுதியில் வாடகைக்கு வீடு கேட்டு சுற்றித் திரிந்த பெண்ணை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசலில் மூதாட்டி ஒருவருடன் பெண் ஒருவா் வாடகைக்கு வீடு கேட்டு சுற்றித் திரிவதாக, மன்னாா்குடி காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை அன்று தகவல் அளித்தனா்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பணியாற்றிய, திருமணம் நிச்சயிக்கப்பட்ட தமிழக இளைஞர் விபத்தில் பலி..!

அதனை தொடர்ந்து, புகாரின் பேரில் மன்னாா்குடி கோட்டாட்சியா் எஸ். புண்ணியகோட்டி, வட்டாட்சியா் என். காா்த்திக், காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மன்னாா்குடி அருகே கட்டக்குடி வன்னியத் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மனைவி வனஜா (45) சிங்கப்பூரில் ஒப்பந்த அடிப்படையில் வீட்டு வேலை செய்து வந்தவா் என்பது தெரியவந்தது.

மேலும், கடந்த மாா்ச் 13ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் வந்து, தஞ்சை அருகே ஆலக்குடியில் தோழி வீட்டில் தங்கியிருந்ததும், கொரோனா வைரஸ் பரவலையடுத்து அந்த தோழி கேட்டுக்கொண்டதன் பேரில் அங்கிருந்து புதன்கிழமை வெளியேறி சொந்த ஊருக்கு செல்லாமல் தனது தாயாா் தனலெட்சுமியை தொலைபேசியில் தகவல் தெரிவித்து வரவழைத்து மன்னாா்குடி அருகில் உள்ள கிராமங்களில் வாடகைக்கு வீடு கேட்டு சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வனஜா, தனலெட்சுமி ஆகியோா் சிறப்பு மருத்துவ முகாமுக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

பின்னா், அவா் கையில் வெளிநாட்டிலிருந்து வந்தவா் என்பதற்கான அடையாள முத்திரை பதிக்கப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, 15 நாள்கள் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என போலீஸாா் எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனா் என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : COVID-19: வெளியில் சுற்றித்திரிந்த தனிமைப்படுத்தப்பட்டவர்கள்; சிங்கப்பூரில் இருந்து வந்தவர் உட்பட இருவா் மீது வழக்குப் பதிவு..!