சீனாவில் இருந்து விழுப்புரம், நீடாமங்கலம், திருவாடானை திரும்பியவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?

Corona Virus : சீனாவில் மருத்துவம் படித்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கடந்த ஜன.1ம் தேதி சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சளித் தொல்லை அதிகம் இருந்ததால் உடனடியாக அவரை முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குள்ள தனிவார்டில் வைத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் அந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்ற விபரம் தெரியவரும்.

மிரட்டும் கொரோனா – சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு தனி ஆளாக வந்த சென்னை மாணவி

சீனாவில் சமையல் வேலை செய்து வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 31ம் தேதி சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில், அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் சிகிச்சை பெற சென்றார். சீனாவில் இருந்து ஊர் திரும்பியவர் என தெரிந்ததும் டாக்டர்கள் அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்புக்காக சேர்த்தனர்.

இதுதொடர்பாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் கூறியதாவது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கிண்டியில் உள்ள ரத்தப்பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது இவர் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் இவர் 30 நாட்களுக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பழங்குளத்தைச் சேர்ந்தவர் மாதவன். 35 வயதான இவர் சீனாவில் ஷாங்காய் நகரில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.

திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாதவன் கடந்த 28-ம் தேதி சென்னை-திருச்சி வழியாக விமானத்தில் வந்தார்.

வூஹான் மாகாணத்தில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்ட 324 இந்தியர்கள் – கொரோனா தொற்று உள்ளதா?

இவருக்கு காய்ச்சல் இருந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று கருதி அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் தனி வார்டில் மாதவன் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது காய்ச்சல் குறைந்து நலமுடன் இருப்பதாக மருத்துவ துறை துணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.