Corona Virus – வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட அனைவருக்கும் இந்தியா நுழைய தடை

corona virus covid 19 visa canceled

Coronavirus outbreak : கொரானா வைரஸ் நோய் உலக சுகாதார மையம் உலகம் தழுவிய கொள்ளைநோய் என்று நேற்று இரவு அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு முக்கிய முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அனைத்து விசாக்களும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாத காலத்திற்கு இந்தியாவின் எல்லைகள் மூடப்படுகிறது. ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்தியாவிற்குள் வெளிநாட்டினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கொள்ளை நோய்கள் சட்டம் 1897-இன் (Epidemic Diseases Act, 1897) கீழ் முக்கிய முடிவுகளை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிற்கு பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமைப்புகளின் உறுப்ப்பினர்கள், முக்கிய தலைவர்களின் வருகையைத் தவிர, வேலை மற்றும் ப்ராஜெக்ட் விசாக்களுக்கு இன்று அதிகாலை 12 மணி முதல் (13/03/2020) தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாக்கள் இல்லாமல் இந்தியாவிற்கு வருகை புரியும் ஓசிஐ (Overseas Citizenship of India) அட்டைகளைக் கொண்டு உள்ள இந்தியர்களின் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையும் 13 மார்ச் அதிகாலை 12:00 மணி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. வெளிநாட்டினர் யாரேனும் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு வர விரும்பினால் அருகிலுள்ள இந்தியன் கமிஷனை தொடர்பு கொள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனா அச்சுறுத்தல் – சென்னையில் 40% விமான சேவை குறைந்தது

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைந்துள்ளதையடுத்து, ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ் நாட்டு விசா வழங்குவதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஏற்கெனவே சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி நாட்டு மக்களுக்கு இ-விசா வழங்குவதை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில் இப்போது இந்த 3 நாடுகளும் கூடுதலாகச் சேர்ந்துள்ளன.

அதன்படி, சீனா, ஹாங்காங், கொரியா, ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு தாயகம் திரும்பும் அனைத்துப் பயணிகளும் தாங்களாகவே அடுத்த 14 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் நிறுவனத்தில் பணி நிமித்தமாகச் சென்றுவிட்டு வந்தால், அடுத்த 14 நாட்களுக்கு அலுவலகத்துக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.

ஏற்கெனவே இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் செல்ல வேண்டாம் என்ற பட்டியலில் கூடுதலாக பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இணைகின்றன.

மார்ச் 11-ம் தேதிக்கு முன்பாக பிரான்ஸ், ஜெர்மன், ஸ்பெயின் நாட்டவர்களுக்கு வழக்கமான விசா, இ-விசா போன்றவை வழங்கப்பட்டு அவர்கள் இன்னும் இந்தியாவுக்குள் நுழையாமல் இருந்தால் அவர்களுக்கு விசா ரத்து செய்யப்படும். மேலும், இந்த 3 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொரோனா பாதித்த நாடுகளுக்குப் பிப்ரவரி 1-ம் தேதிக்கு மேல் சென்றிருந்து அவர்கள் இந்தியாவுக்குள் நுழையாமல் இருந்தாலோ அவர்கள் அனைவருக்கும் விசா ரத்து செய்யப்படுகிறது.

மத்திய அரசின் அறிக்கை:

இந்தியாவுக்குள் நுழைய வழங்கப்படும் விசாக்கள் அனைத்தும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

விசா இல்லாமல் அனுமதிக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏப்ரல் 15-ம் தேதி வரை இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் யாரேனும் இந்தியா வர வேண்டும் என்ற கட்டாய சூழல் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

அவசர தேவை இல்லை என்றால் வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் இந்தியா வருவதை தவிர்க்க வேண்டும்.

சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு வந்தவர்கள, இந்தியாவில் இருந்து அந்த நாடுகளுக்கு சென்று திரும்பிய இந்தியர்கள் உள்பட அனைவரும் குறைந்தபட்சம் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்தியர்கள் அவசர தேவை இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பினால் அவர்களும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அண்டை நாடுகளில் இருந்து சாலைவழியாக இந்தியாவுக்குள் நுழையும் அனைவரும் சோதனை சாவடிகளில் கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள்.

இந்தாலியில் வேலை மற்றும் கல்வி பயில சென்ற இந்தியர்கள் கொரோனா குறித்த சோதனைகளை இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளலாம். சோதனையில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட நபர்கள் விருப்பப்பட்டால் இந்தியாவுக்கு வரலாம்.

அவ்வாறு நாடு திரும்பும் இந்தியர்கள் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டாலும் 14 நாட்கள் கட்டாயம் தனிமை படுத்தப்படுவார்கள்.