கொரோனா வைரஸ் – ஆஸ்திரேலியாவில் முதல் பலி

corona virus, covid 19, australia

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. மேலும் தென்கொரியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தைவான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஈரான் உள்பட 60 நாடுகளில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,870 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,824 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா நாட்டில் 78 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தற்போது ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஜப்பானில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் வந்த 164 ஆஸ்திரேலியர்களில் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து கப்பலில் வந்த அனைவரும் பெர்த் நகரில் உள்ள சர் சார்லஸ் கெய்ட்னர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தசூழலில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியான முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.