வெளிநாட்டில் இருந்து வரும் அனைவருக்கும் தீவிர பரிசோதனை: இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசுகையில், “இந்திய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இதுவரை 5 லட்சத்து 89 ஆயிரம் பயணிகளுக்கும், நேபாள எல்லையில் 10 லட்சம் பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா? என பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில் சுமார் 27 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்தியாவில் 6 பேருக்கு கொரோனா உறுதி – நான்கு நாடுகளுக்கு விசா ரத்து

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒருவருக்கும், ஆக்ராவில் உள்ள அவரது உறவினர்கள் 6 பேருக்கும், சுற்றுலா வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 16 பேருக்கும், அவர்களின் இந்திய டிரைவருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் இந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கேரளாவில் 3 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றிலும் 3 கிலோமீட்டர் வரை உள்ள வீடுகளில் வசிப்பவர்களை சுகாதார அதிகாரிகள் பரிசோதித்து வருகிறார்கள். தற்போது 15 ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா என ஆய்வு நடத்தப்படுகிறது. கூடுதலாக 19 ஆய்வகங்களில் இந்த சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 8 நேற்று முன்தினம் முதலும், மற்றவை நேற்றும் செயல்பட தொடங்கின.

இதுவரை குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. இனிமேல் அனைத்து சர்வதேச விமான பயணிகளுக்கும் 21 விமான நிலையங்களில் பரிசோதனை நடத்தப்படும்.

ஈரானில் சுமார் 1,200 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் ஆன்மிக பயணம் சென்றவர்கள். எனவே ஈரான் அரசு ஒத்துழைத்தால் அங்கு ஒரு ஆய்வகத்தை அமைப்பதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியர்களை இங்கு திரும்ப அழைத்துவருவதற்கு முன்பு அவர்களுக்கு வைரஸ் தாக்குதல் உள்ளதா என அந்த ஆய்வகத்தில் பரிசோதனை நடத்தப்படும்.

இதற்காக இந்தியாவில் இருந்து ஒரு விஞ்ஞானியும், 3 மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்களும் ஈரான் சென்றுள்ளனர்.

இந்தியாவில் முகக்கவசம் உள்ளிட்ட தற்காப்பு கருவிகள் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக அவைகள் ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவை தாராளமாக கிடைப்பதற்கும் பல கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில அரசுகளும் கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க தேவையான அனைத்து வசதிகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களும் கூட்டமான பகுதிகளையும், நோய் தாக்குதல் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு ஹர்ஷவர்தன் கூறினார்.

அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறும்போது, “கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்துவருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி தினமும் சூழ்நிலையை கண்காணித்து வருகிறார்” என்றார்.

டெல்லியில் கொரோனா தாக்குதல் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 88 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு சுகாதார குழுவை அமைத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த சூழ்நிலை தங்களுக்கு கவலை அளிப்பதாகவும், ஆனாலும் யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

டெல்லி நோயாளியுடன் தொடர்பில் இருந்த நொய்டாவை சேர்ந்த சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு வைரஸ் தாக்குதல் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனாலும் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ஒருவருக்கு கொரோனா தாக்குதல் உறுதியாகி உள்ளதால், வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா? என்று கருவி மூலம் சோதனை செய்வதை போலீசார் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று பா.ஜனதா செய்திதொடர்பாளர் தஜிந்தர்பால் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் நோய் தாக்குதலுக்கு உள்ளானவரின் மகன் படித்துவரும் பள்ளி 4-ம் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இதேபோல டெல்லியில் 3 பள்ளிகள் விடுமுறை அளித்துள்ளன. மேலும் 2 பள்ளிகள் வசந்தகால விடுமுறையை முன்கூட்டியே அறிவித்துள்ளன.

டெல்லியில் உள்ள கடைகளில் கைகழுவும் சோப்புகள், முகக்கவசங்கள் ஆகியவை அனைத்தும் விற்றுத்தீர்ந்துவிட்டன. மக்கள் அனைவரும் பீதியடைந்து இவற்றை போட்டிபோட்டு வாங்கியதாக தெரிகிறது. இதனால் பல கடைகளில் இவை இருப்பு இல்லை. சில கடைகளில் குறைந்த அளவு முகக்கவசங்கள் இருப்பதால் இரண்டு மடங்கு விலைக்கு விற்கிறார்கள்.

இந்தியாவில் 6 பேருக்கு கொரோனா உறுதி – நான்கு நாடுகளுக்கு விசா ரத்து

வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள இத்தாலி சுற்றுலா பயணிகள் 16 பேரும் கடந்த மாதம் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். எனவே அந்த இடங்களில் அவர்கள் தங்கிய ஓட்டல்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சுற்றுலாதலங்கள் ஆகிய பகுதிகளுக்கு மாநில சுகாதார அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர்.

இதில் சுமார் 215 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இவர்களில் 93 பேருக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 51 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரிந்துவிட்டது. மற்றவர்களின் பரிசோதனை முடிவு இன்னும் கிடைக்கவில்லை.

கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து ஹோலி கொண்டாட்டங்கள் ஜனாதிபதி மாளிகையில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.