இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தற்போது 42,533 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 1,373 ஆக உள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் வேகத்தை உலக சுகாதார மையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்தியாவில் ஊரடங்கு முடிந்த பின் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும், இதற்கு மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையத்தின் பொது இயக்குனரின் சிறப்பு தூதர் டேவிட் நபாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நபாரா அளித்த பேட்டியில், “இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பு பணிகள் நன்றாக செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். காண்டாக்ட் டிரேஸ் செய்வதிலும், நோயாளிகளை தனிமைப்படுத்துவதிலும் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. மிக சிறப்பாக அவர்கள் புள்ளி விவரங்களை கையாள்கிறார்கள்.
மக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். ஒரு வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை கண்டுபிடிப்பது மிக முக்கியம். இதற்கு காண்டாக்ட் டிரேஸ் அவசியம். இந்தியா அதை சிறப்பாக செய்து வருகிறது. நாம் வைரசுக்கு முன்பாக எப்போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் பரவலை தடுக்க முடியும். இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது சிறப்பான முடிவு.
அப்போதுதான் வைரஸ் பரவலை நாட்டுக்குள் தடுக்க முடியும். ஆனால் ஊரடங்கு காரணமாக வைரஸ் மொத்தமாக அப்படியே மறைந்து விடாது. ஊரடங்கிற்கு பின்பும் வைரஸ் இருக்கும். இந்தியாவில் ஊரடங்கு முடிந்த பின் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். இந்த வைரஸ் எங்கெல்லாம் தீவிரம் அடைகிறது என்று அரசு பார்க்க வேண்டும். இதற்கு மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்.
மொத்தமாக ஊரடங்கை நீக்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக நீக்க வேண்டும். அதே சமயம் பொருளாதார பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் ஊரடங்கிற்கு பிறகும் சமூக இடைவெளியை கடைபிடிக்க விடும். இதற்கு ஏற்றபடி அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்” என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.