தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124-ஆக உயர்வு – சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த 57 நபர்களில் 45 பேர் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். அக்கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் திரும்பிய அனைவரும் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்டனர் . அவர்களில் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அம்மாநாட்டில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி இருப்பதால், சொந்த ஊர் திரும்பிய அனைவரையும் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர், திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், மேலப்பாளையம், அம்பாசமுதத்திரம், களக்காடு ஆகிய இடங்களில் 23 பேர் கண்டறியப்பட்டு, அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் கூறுகையில், “தமிழகத்தில் மட்டும் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 57பேர். இந்த 57 பேரில் 45 பேர் நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். டெல்லி மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1,131 பேர் கலந்துகொண்டுள்ளனர், அதில் 515 பேரை மட்டுமே கண்டறிந்துள்ளோம், மீதம் உள்ள அனைவரும் தாமாக முன்வந்து ஒத்துழைக்க வேண்டும்.நெல்லையில் 22 பேர், நாமக்கல்லில் 18 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளதால் உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம். அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றிருந்தால் கூட எங்களை தொடர்பு கொள்ளமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.