இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய மோதல் நடந்தது. அதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா- சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்த கருத்துக்கள், சீன சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
சீனாவில் வெய்போ மற்றும் வி-சாட் ஆகிய செயலிகள் பொதுமக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை சீனாவின் பிரபல சமூக ஊடக செயலியான வி-சாட் நீக்கியுள்ளது. இதுகுறித்து அந்த சமூக ஊடகம் சார்பில் தெரிவிக்கையில், “அரசு ரகசியங்களை தெரிவிக்கக்கூடாது. தேச பாதுகாப்புக்கு ஆபத்து நேர விடக்கூடாது என்ற காரணத்தால் இந்த பதிவுகளை நீக்கி உள்ளோம்” என்று கூறியுள்ளது.
முன்னதாக இந்தியாவின் அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியான இந்திய – சீன எல்லை நிலவரம் பற்றிய மோடியின் கருத்துகள், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை மந்திரி இடையே நடைபெற்ற தொலைபேசி வழி உரையாடல், வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரின் அறிக்கை போன்றவை வி-சாட் சமூக ஊடகம் முன்னதாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.