வாழ வேண்டிய வயதில் அரசியல் கட்சிகளால் பலியாக்கப்பட்ட இளம் பெண் – வேதனையில் சென்னை

சென்னை பள்ளிக்கரணையில் திருமண வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் லாரி மோதி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ (23), பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சாலையோரங்களில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்தும், விதிமீறலில் ஈடுபட்டு பேனர் வைத்ததன் மூலம் கல்லூர் மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“விதி மீறிய பேனர் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் அரசும், அதிகாரிகளும் செயல்படுத்துவர்களா? விதி மீறல் பேனர்களை அகற்றவில்லை என்றால் அரசு அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா? அல்லது ஹெலிகாப்டர் பறக்கிறார்களா?” சமீபத்தில் சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இப்போது அதே விதி மீறிய பேனரால் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது.

இந்நிலையில், இளம் பெண்ணின் மரணத்திற்கு காரணமாக இருந்த பேனரை அச்சடித்த அச்சகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அச்சகத்திற்கு சீல் வைத்தது சரி… பேனர் வைத்த கட்சியினருக்கு??