சென்னையில் நீல நிறமாக மாறிய கடல் அலைகள்! பீதியுடன் வெளியேறிய பொதுமக்கள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம்(ஆக.18) கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக இன்ஸ்டா கிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நள்ளிரவில் கடற்கரை பகுதிகளில் திரண்டனர். திருவான்மியூர் கடற்கரையில் திரண்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள், கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வமுடன் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களிலும் புகைப்படம் எடுத்து மகிழ்​ந்தனர். இச்சம்பவத்தால் சென்னை நகரின் கடற்கரை பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

கடல் அலைகள் நீல நிறமாக எப்படி மாறும்?

இதுபோன்ற நிகழ்வுகளைக் கடலில் அவ்வப்போது பார்க்க முடியும். இதற்குக் காரணம், உயிரொளிர்வு (Bioluminescence) என்னும் தன்மைதான். ஓர் உயிரினம் மூலம் இயற்கையாக உருவாகும் ஒளியையே இப்படி அழைக்கின்றனர். மின்மினிப் பூச்சிகள் இதற்கு ஓர் உதாரணம். இப்படி கடலோரங்களில் அலைகள் மின்னுவதற்கு dinoflagellates என்ற ஒரு பாசி (Algae) வகைதான் காரணம். பெரும்பாலான நேரங்களில் தற்காப்புக்காக இப்படி ஒளியை வெளியிடுகின்றன இந்த பாசிகள். அதாவது, மீன்கள் இவற்றைச் சாப்பிட முயலும்போது இவை நடக்கும். அப்படிச் செய்வதன்மூலம், பெரிய மீன்களை இதனால் ஈர்க்கமுடியும். அந்த மீன்கள், சிறிய மீன்களைத் தின்றுவிடும். கப்பல்கள் செல்வது போன்ற எந்தவித அழுத்தம் இருந்தாலும் ஒளியை வெளியிடுகின்றன இந்தப் பாசிகள்.

பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், மிகவும் அதிகமாக காணப்பட்டால் ஆபத்தானவை இவை என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பாசிகள் பலவும் நச்சுத்தன்மை கொண்டவை. எண்ணிக்கையில் ஓரளவுக்கு மேல் இவை உயர்ந்தால், அங்கு இருக்கும் உணவுச் சங்கிலியில் நச்சுப் பொருள்களின் அளவை அதிகரித்துவிடும். அங்கு வாழும் மீன்களை சாப்பிடும்போது, அது மனிதர்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.