அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

சென்னையில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு பேனர்க்கு ரூ.5,000/- வீதம் அபராதம் வசூலிக்கப்படும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை செய்துள்ளது.

அதிகபட்சம் ஆறு நாட்கள் மட்டும் பேனர் வைக்க அனுமதிக்கப்படும், அதில் தேதியுடன் கூடிய அனுமதி நோட்டீஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும், மேலும் பேனர் பிரிண்ட் செய்யும் பிரிண்டர் பெயர் மற்றும் உரிமம் கொண்டிருக்க வேண்டும்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைக்க சென்னை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட வேண்டும் என ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நாள் 19.12.2018-ல் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைக்க இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் காலங்களில் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளும்பட்சத்தில், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 விதி Tamil Nadu Urban Local Bodies (Permission for Erection of Digital Banner and Placards) Rules 2011 தெரிவித்துள்ள பின்வரும் சட்டம் மற்றும் விதிமுறைகளை பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் படிவம்-1யைப் பூர்த்தி செய்து அனுமதி கோரும் நாளுக்கு இரண்டு (2) நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தடையின்மைச் சான்று, அமைக்கப்பட உள்ள இடம் தனியார் கட்டிடமாகவோ, அரசு நிறுவனம் சார்ந்த கட்டிடமாகவோ இருந்தால் அவர்களிடமிருந்து அதற்கான தடையின்மைச் சான்று, அமைக்கப்பட உள்ள இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு அனுமதிக்கும் (விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள்) அனுமதி கட்டணம் ரூ.200/-க்கான வரைவோலை ((Demand Draft) மற்றும் ஒவ்வொரு அனுமதிக்கும் காப்பீட்டு தொகை ரூ.50/-க்கான வரைவோலை ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் பெயரில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் பின்வரும் அட்டவணையில் கண்டவாறு சாலையின் அகலத்தைப் பொறுத்து அனுமதி வழங்கப்படும்.

சாலை அகலம் (அடி) அனுமதிக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் / விளம்பரத் தட்டிகள் அளவு 100 அடிக்கு மேல் 15 அடி (உயரம்) 24 அடி (அகலம்). 60 முதல் 100 வரை 12 அடி (உயரம்) 20 அடி (அகலம்). 40 முதல் 60 வரை 10 அடி (உயரம்) 16 அடி (அகலம்). 20 முதல் 40 வரை 8 அடி (உயரம்) 5 அடி (அகலம்). 10 முதல் 20 வரை 3 அடி (உயரம்) 2.5 அடி (அகலம்). சாலையின் மையத்தடுப்பில் 4 அடி (உயரம்) 2.5 அடி (அகலம்).