காதலனுடன் இணைந்து திருட்டு பைக்கில் செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவி கைது!

சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவி மற்றும் அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி வைக்கப்பட்டு காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் செல்போன் பறிப்புக்கு உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லிப்சா. இவர் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் சன் பிளாசா அருகே தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் லிப்சாவின் சாம்சங் செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் லிப்சா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்மூலம் செல்போன் பறிக்க உபயோகித்த இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும் அந்த வாகனத்தில் வந்த ஒருவர் கல்லூரி மாணவி என்பதுதான் மற்றொரு அதிர்ச்சித் தகவல்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அனைத்து காவல் நிலையங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரது புகைப்படங்களையும் அனுப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சைதாப்பேட்டை அருகே, ஒரு வீட்டில் லிவிங் டுகெதர் போல் வாழ்ந்து வந்த இருவரையும் போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

பைக்கை ஓட்டியவாறு மொபைலை கொள்ளையடித்தவர் ராஜூ(29) என்பதும் அவர் மீது ஏற்கனவே வடபழனி காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு, வாகன திருட்டு ஆகிய வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவருடன் பின் அமர்ந்திருந்த மாணவி, தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மீடியாவில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் விஷ்வல் கம்யூனிக்கேஷன் படித்து வந்ததும் தெரியவந்துள்ளது.