சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதில் யாருக்கு நிலம் சொந்தம், மற்றொரு தரப்பிற்கு என்ன தீர்வு உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.

அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கான அமைப்பை மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். அந்த அமைப்பிடம் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, கடந்த 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் மூன்றாக பிரித்துக் கொடுத்தது தவறு

1857ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபட தடையில்லை. ஆனால் 1857ல் கட்டடத்தின் உள்பகுதிக்கும், வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன – ரஞ்சன் கோகாய்

நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. ஆவணங்களின் படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது – தலைமை நீதிபதி

அயோத்தி தான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் ஒருமித்த கருத்து கொண்டிருக்கின்றனர். அதே இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள் – ரஞ்சன் கோகாய்

பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. அதற்கு முன்பு அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்டது அல்ல. இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன – தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் மதிக்கிறது – தலைமை நீதிபதி

நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோகி அகாராவின் மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது – தலைமை நீதிபதி

ஒரு மதத்தினரின் மத நம்பிக்கை மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுக்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் – தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

சன்னி பிரிவுக்கு எதிராக ஷியா வக்பு போர்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது – உச்ச நீதிமன்றம்

வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை 40 நாட்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட விசாரணை வழக்கு ஆகும்