காஞ்சிபுரம் நகரமே கடந்த 48 நாட்களாக திருவிழாக்கோலம் பூண்டு, எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகளும், காக்கிச் சட்டைகளும் என நிரம்பி வழிந்தது. இவற்றுக்கு ஒரே காரணம் அத்தி வரதர்…
40 ஆண்டு காலமாக ஆனந்தசரஸ் குளத்தில் சயனகோலத்தில் இருந்த அத்திவரதர் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வெளியே வந்தார். பூஜைகளுக்குப் பின்னர் ஜூலை 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார் அத்திவரதர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர், கழிவறை, தற்காலிக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. குற்ற சம்பவங்களை தடுக்க கோவில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
பொது தரிசன பாதை, 300 ரூபாய் கட்டண பாதை மற்றும் விஐபி தரிசனம் என மூன்று பாதைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தினந்தோறும் வண்ண பட்டாடை உடுத்தி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் அளித்து வந்தார் அத்திவரதர்.
ஜூலை 31-ம் தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்தி வரதர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியில் முதல் நின்ற கோலத்தில் அருள் பாலித்தார். சயன கோலத்தில் அத்தி வரதரை தரிசித்த பக்தர்கள் மீண்டும் நின்ற கோலத்தில் அத்தி வரதரை தரிசிக்க வந்ததால் நாளொன்றுக்கு பக்தர்கள் வருகை 3 லட்சத்தையும் தாண்டியது. அதற்கேற்ப போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் விரிவுபடுத்தப்பட்டன. பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அத்தி வரதர் தரிசன நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.
விழாவின் 47-ம் நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். திருப்பதி கூட்டமெல்லாம் ஜுஜூபி என்கிற அளவுக்கு கூட்டம் இருந்தது. பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருந்ததால் நள்ளிரவு ஒரு மணியளவில் கிழக்கு கோபுர வாசல் நடை திறக்கப்பட்டிருந்தது. அதற்கு பின் நடை அடைக்கப்பட்டு கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மொத்தமாக, 47 நாட்களில் ஒரு கோடியே 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அத்தி வரதரை தரிசித்தனர். இதேபோன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தியம்மாள், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி உள்ளிட்டோரும் அத்தி வரதரை தரிசித்து சென்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், லாரன்ஸ், நயன்தாரா உள்ளிட்ட திரை பிரபலங்களும் வருகை தந்தனர்.
இந்நிலையில், தரிசனம் நிறைவுற்றதால், சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு அத்தி வரதர் சிலையை வசந்த மண்டபத்தில் இருந்து 100 அடி தொலைவில் உள்ள அனந்தசரஸ் குளத்திற்குள் அத்தி வரதர் எழுந்தருளச் செய்யப்பட்டார். இனி, 40 ஆண்டுகள் கழித்து 2059 ஆம் ஆண்டு அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.