சிங்கப்பூரில் எலெக்ட்ரிஷன் வேலை செய்து வரும் அரியலூர் வாலிபரை மணந்த பிலிப்பைன்ஸ் பெண்!

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை அரியலூர் இளைஞர் காதலித்துப் பெற்றோர்கள் சம்மதத்துடன், தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

மணமக்கள் இருவரும் மேடையில் பேசிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அண்ணங்காரன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் சிங்கப்பூரில் எலெக்ட்ரிஷன் வேலை செய்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரியா என்கின்ற ரோனா ஜேன் என்ற இளம் பெண்ணுடன் அறிமுகமானார். முதலில் நண்பர்களாகப் பழகிய இவர்களுக்குள் நாளடைவில் காதல் மலர்ந்தது. ரோனா ஜேன் என்ற பெயரை பிரியா என்று மாற்றிக்கொண்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஃபேஸ்புக் மூலமாகக் காதலித்து வந்தவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

வேல்முருகன் தனது பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெற்றார். அதேபோன்று பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணும் அவரது பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் பாரம்பர்யத்துடன் எளிமையான முறையில் இன்று திருமணம் நடைபெற்றது. மணமக்களை உறவினர்களும், பொதுமக்களும் வாழ்த்தினர்.

வெளிநாட்டில் வாழும் பெண்ணை தமிழக இளைஞர் கரம் பிடித்து திருமணம் செய்து கொண்டது ஜெயங்கொண்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களது திருமணம் பற்றிக் கேள்விப்பட்ட பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள்.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்மணியான ரோனா ஜேன் (பிரியா) பேசியதாவது. ”எனக்குத் தமிழக கலாசாரம் மிகவும் பிடித்துள்ளது. நான் முகநூல் வழியாக வேல்முருகனைச் சந்தித்தேன். நாங்கள் இருவரும் நல்ல நட்பாகப் பழகினோம். பின்பு அவரது பேச்சு.

என் மீது காட்டிய அக்கறை எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தமிழ் நாட்டோடா கலாசாரத்தைப் பத்தி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் தமிழக கலாசாரத்தை நெட்டில் படித்திருக்கிறேன். ரொம்ப வித்தியாசமாக இருந்தது. நாம் ஏன் அங்க போகக்கூடாதுனு என்னோட மனசுல எழுந்துகிட்டே இருந்துச்சி. நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து இன்று திருமணம் செய்து கொண்டோம். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு எங்களது பெற்றோரைச் சந்தித்து ஆசிபெற உள்ளோம்” என்றார்.