ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமான டிக்கெட் முன்பதிவினை முடக்கி வைத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம். கொரோனா வைரஸ் காரணமான ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
வருகின்ற ஏப்ரல் 14 அன்று ஊரடங்கு முடிவுக்கு வருவதால், ஏப்ரல் 15-க்கு பிறகு விமான போக்குவரத்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை விமான சேவைகள் நடைபெறாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர்,” ஏப்ரல் 14 பிறகு வரும் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
விமான டிக்கெட் முன்பதிவுகளை ஏப்ரல் 14-க்கு பின் தொடங்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ள நிலையில், விமான ஓட்டிகளுக்கு 10 விழுக்காடு ஊதியத்தைக் குறைக்கவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த முடிவுக்கு ஏர் இந்தியா விமான ஓட்டிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஏர் இந்தியாவின் முடிவு, பிரதமரின் அறிவுறுத்தலுக்கு எதிராக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.