வந்தே பாரத் மூன்றாம் கட்ட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 இடங்களுக்கான வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்ட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது ஏர் இந்தியா.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் முழுவதும் நிறுத்தப்பட்டன. இதனிடையே பொது முடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவரும் மத்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் முதல்கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் மே 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

இந்த காலத்தில் 12 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் விமானம் மற்றும் கப்பல் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். மே 17 முதல் வரும் 13 ஆம் தேதி வரை இரண்டாவது கட்ட சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 337 விமானங்கள் மூலம் 38 ஆயிரம் பேர் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது கட்ட பாரத் திட்டத்தில் 103 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது.

இதுவரை 454 விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டு 1,17,123 பேர் இந்தியா வந்துள்ளனர். இதற்கிடையே மூன்றாவது கட்ட சேவைக்காக மத்திய அரசு தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்தியா வருவதற்காக 3,48,565 பேர் இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் அரசின் விதிமுறையின்படி தவிர்க்க முடியாத காரணங்கள், கர்ப்பிணிகள், முதியோர், மாணவர்கள், வேலையிழந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு சிறிது காலம் ஆகும் வேளையில், ஏர் இந்தியா நேற்று (ஜூன் 5) மாலை 5 மணி முதல் அமெரிக்காவின் நியூயார்க், நெவார்க், சிகாகோ, வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ மற்றும் கனடாவின் வான்கூவர், டொராண்டோ உள்ளிட்ட மகாணங்களுக்கான வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்ட சேவைக்கான முன்பதிவுகளை தொடங்கியது ஏர் இந்தியா.

தொடங்கிய 2 மணிநேரங்களில் 1700 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுவரை 64 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும், நேற்று மட்டும் 844 இந்தியர்கள் வந்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதல் கட்டமாக வரும் 8 ஆம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்படுகிறது. ஜூலை மாதம் தொடங்கும் இரண்டாம் கட்டத்தில், கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்பாடு தொடங்கும். அதைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத்தில், மெட்ரோ மற்றும் சர்வதேச விமானங்கள் சேவை மீண்டும் தொடங்கும் என தெரிகிறது.