தங்களுக்கு சேரவேண்டிய தொகையை ஏர் இந்தியா வழங்க வேண்டும் – ஏர் இந்தியா விமானிகள் சங்கம்

தங்களுக்கு சேரவேண்டிய தொகையை ஏர் இந்தியா வழங்க வேண்டும் - ஏர் இந்தியா விமானிகள் சங்கம்
Copyright: © 2020 Bloomberg Finance LP

நிலுவையிலுள்ள தங்களுக்குச் சேர வேண்டிய தொகையினை உடனடியாக வழங்கி தாருங்கள், ஏர் இந்தியா பணியை விட்டு விலக வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகத்துக்கு ஏர் இந்தியா விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை மத்திய வான்வழிப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா பைலட் அமைப்புக்கிடையே நடந்தது. இதுகுறித்து ஏர் இந்தியா பைலட் சங்கம் கூறியிருப்பதாவது, “கொரோனா காலத்தில் அயராது பணியாற்றிய எங்களது முன்னணி பணியாளர்களை தாக்கும் போக்குக்கு கண்டனம் வெளியிட்டோம்.

இந்த கொரோனா காலக்கட்டத்திலும் விமான போக்குவரத்தின் நலன்களுக்காக முழு ஆதரவு அளிப்பதையும் உறுதி செய்தோம். அனைத்து ஊழியர்களும் ஏர் இந்தியாவின் சம்பளக்குறைப்பில் பங்கேற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.

ஏர் இந்தியாவின் சம்பளமில்லாத கட்டாய விடுப்பு முறையும் சமமாக அனைத்து ஊழியர்களுக்கும் கருதப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். மேலும் சந்தை நிலவரங்களின் படி அனைத்தும் முடிவு செய்யப்படவேண்டும்.

இதுவரை நிலுவையில் உள்ள பாக்கித் தொகையில் எங்களுக்குச் சேர வேண்டியதில் 25% தொகையினை உடனடியாக வழங்கி, பைலட்கள் ஏர் இந்தியா பணியிலிருந்து விலக வழிவகை செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்தோம். தன்னிச்சையான சம்பளக்குறைப்பை ஏற்க மாட்டோம், சம்பளக்குறைப்பு என்பது சந்தை நிலவரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டதாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த மாதிரியான காலக்கட்டங்களில் எங்களை போராட்டம், வேலை நிறுத்தம் போன்றவற்றுக்கு தள்ளி விட வேண்டாம். சம்பளக்குறைப்பு அனைத்து ஊழியர்களுக்குமானதாக சந்தை நிலவரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கை.” என்று மத்திய அமைச்சகத்திடம் ஏர் இந்தியா விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தின் தொடர்ச்சி ஜூலை 13ம் தேதி நடைபெறும்.