வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் மக்களை இந்தியா அழைத்துவர ஜூன் 4ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் இயக்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிப்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த பயணிகள் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனை சரிசெய்ய இந்திய அரசு ‘வந்தே பாரத்’ எனும் திட்டத்தின் கீழ் சிக்கியுள்ள பயணிகளை மீட்டு வருகிறது.
வந்தே பாரத் திட்டத்தின் முதல் கட்டம் மே 7 முதல் மே 14 வரை நடைபெற்றது. இதன் இரண்டாம் கட்டமாக மே 16ல் தொடங்கிய திட்டம் ஜூன் 13 வரை நடைபெறுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 32 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் 67 ஆயிரம் இந்தியர்களை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் ஜூன் 4 முதல் தொடங்கும். ஆக்லாந்து, சிகாகோ, ஸ்டாக்ஹோம், நியூயார்க், பிராங்கபர்ட், சியோல் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லிக்கும், லண்டன் மற்றும் நியூஜெர்சியில் இருந்து மும்பைக்கும் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு விமானங்களுக்கான முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா இணையதளம் மற்றும் புக்கிங் அலுவலகங்களில் முன்பதிவு செய்யலாம் என்று ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.