கேரள வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு பக்ரீத் பண்டிகை விற்பனைக்கு வைத்திருந்த அனைத்துப் புதுத் துணிகளையும் தந்து உதவிய தெரு வியாபாரி!

நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு ஈத் பண்டிகை விற்பனைக்காக வைத்திருந்த அனைத்து புதுத் துணிகளை அள்ளித்தந்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கேரளாவைச் சேர்ந்த தெரு வியாபாரி ஒருவர்.

கேரளாவில் வெள்ளப் பெருக்கினால் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றையும் இழந்த அவர்களுக்கு உணவும் குடிநீரும்தான் தற்போது தரப்படுகின்றன. இந்நிலையில் அவர்களுக்கு புத்தம்புது ஆடைகள் கிடைத்தால் எவ்வளவு மகிழ்வார்கள்.

அப்படியொரு மகிழ்ச்சியை அளித்துள்ளார் நவ்ஷாத் (40. இவர் ஒரு சாதாரண தெரு வியாபாரி. ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமானால் நமது சேமிப்பிலிருந்து ஒரு சிறு பங்கை மட்டுமே நாம் மற்றவர்களுக்கு தருவோம்.

ஆனால் தனது சேமிப்பு அனைத்தையும் செலவழித்து ஈத் பண்டிகை விற்பனைக்காக புதுத் துணிகளை வாங்கி வைத்திருந்தார் நவ்ஷத். தனது சின்னஞ்சிறிய குடவுனில் வைத்திருந்த துணிகளை எல்லாம் பத்து கோணி பார்சல்களில் எடுத்துச்சென்று நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்துவிட்டார்.

முகாம்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் அவரை எச்சரித்தனர். ஒரு சாதாரண தெரு வியாபாரியாக இருந்துகொண்டு இவ்வளவு துணிகளையும் கொடுத்துவிட்டால் நிச்சயம் உங்களது பண்டிகை விற்பனை பாதிக்கும், உங்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும் என்றனர். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. அவர் துணிகளை பேக் செய்வது அதை எடுத்துச்செல்வது போன்ற காட்சிகள், தன்னார்வலர்கள் எடுத்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

அதன்மூலம் இச்செய்தி கேரளாவெங்கும் பரவியபோது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. நவ்ஷாத்தின் தன்னலமற்ற சேவைக்கு பொதுமக்கள் தவிர, எர்ணாக்குளம் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுஹாஸ், திரைப்பட நடிகர் ஆசிப் அலி, கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் உள்ளிட்டவர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஒருபடி மேலே போய் தனது ஈத் திருநாள் வாழ்த்துக்கு நவ்ஷாத் படத்தைத்தான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதுகுறித்து நவ்ஷாத் கூறுகையில், ”இந்த உலகத்தைவிட்டு நாம் செல்லும்போது நாம் எதையும் எடுத்து செல்ல முடியாது. என்னதான் தொழிலில் லாபம் கிடைத்தாலும் அதை தேவைப்படுபவர்களுக்கு உதவுவதுதான் திருப்தி. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஏழைகளுக்குத்தான் நான் உதவி செய்துள்ளேன்.

நன்கொடையாக அளிக்கும் இந்த உடைகள் நிச்சயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதனால் ஏற்படும் லாபநஷ்டங்களைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். இதுவும் ஒருவகையில் ஈகைத் திருநாளை கொண்டாடும் முறைதானே?” என்று சிரிக்கிறார் நவ்ஷத்.