தமிழகம் வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

இந்தியா முழுவதும் கடந்த மே 25-ந் தேதியில் இருந்து உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்தும் போது விமான நிலையங்களை இயக்குவோர், பயணிகள் மற்றும் அது தொடர்புடையவர்கள் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி மத்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்தது.

மாநிலங்களில் உள்ள நிலையை மதிப்பிட்டு அதற்கேற்றபடி உள்ளூர் பயணங்களுக்கான அறிவுரைகளை அந்தந்த மாநிலங்கள் வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதனடிப்படையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது.

விமானத்தில் ஏறும் முன்பு பயணிகள் ஒவ்வொருவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கும் யாரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற பாகத்துக்கு செல்லும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம் உண்டு. பயணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் (ஐ.சி.எம்.ஆர்.) பெற்ற கொரோனா இல்லை என்ற சான்றிதழை அளித்தால் பரிசோதனை செய்யப்பட மாட்டாது.

விமானத்தில் பயணிப்பதற்கு முன்பு ‘இ-பாஸ்’க்கு விண்ணப்பித்து அதை பெற்றிருக்க வேண்டும். தொழில் விஷயமாக வேறிடத்துக்கு சென்று விட்டு 48 மணி நேரத்துக்குள் திரும்பக்கூடிய பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இல்லாவிட்டால், வீட்டு தனிமைப்படுத்தலில் 7 நாட்கள் இருக்க வேண்டும். மேலும் 7 நாட்களுக்கு தனக்கு சுயபரிசோதனையை பயணி மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் முதல் நாள் மற்றும் 7-ம் நாளில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும். கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தும் மையங்களில் அவர்கள் 7 நாட்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். தொற்று இல்லை என்றாலும் 7 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

அங்கும் தொற்று இல்லை என்று தெரிய வந்தால் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். வீட்டில் அந்த வசதி இல்லை என்றால் அந்த மாவட்டத்தில் உள்ள வசதியாக உள்ள தனிமைப்படுத்தும் இடங்களுக்கு 7 நாட்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகளுக்கு விமானம் ஏறுவதற்கு முன்பு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள். தான் செல்லும் நாட்டில் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் பின்பற்ற வேண்டும்.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலம் வரும் பயணிகளிடம் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படும். மராட்டியம், டெல்லி, குஜராத்தில் இருந்து வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியம் செய்யப்படும். ஐ.சி.எம்.ஆரிடம் பெற்ற கொரோனா இல்லை என்ற சான்றிதழை அளித்தால் பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு செல்லும் விமானங்களில் செல்லும் பயணிகளுக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்களை அனுமதிக்க முடியாது. எந்த மாநிலத்துக்கு செல்கிறார்களோ அங்குள்ள கொரோனா தொற்று தவிர்ப்பு நடவடிக்கைகளான பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்றவற்றுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

விமான நிலையங்களில் ஒவ்வொரு பயணிக்கும் அழியாத மை மற்றும் தனிமைப்படுத்துதல் குறியீடு (சீல்) வைக்கப்படும். ‘சார்ட்டர்ட்“ விமானங்களில் பயணிப்போர் பரிசோதனை மற்றும் தனி இடங்களில் (ஓட்டல்) தனிமைப்படுத்தப்படுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோர் இதற்கான விதிவிலக்கை பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.