ஊரடங்கிற்கு பிறகு பயணிகள் விமான போக்குவரத்து மீண்டும் செயல்பட தொடங்கிய முதல் நாளில் 58,318க்கும் மேற்பட்ட பயணிகள் தாங்கள் செல்ல விருப்பப்பட்ட ஊர்களுக்கு பயணித்ததாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று (26 மே) தெரிவித்தார். மேலும் முதல் நாளான திங்களன்று 832 விமானங்கள் இயக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
கொரொனா வைரஸ் பெரிய அளவில் பாதித்து, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானங்கள் கடந்த திங்கள்கிழமை (மே 25) மீண்டும் செயல்படத் தொடங்கின.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் பரிந்துரைத்த கடுமையான விதிமுறைகளை அனுசரித்து, டெல்லியில் இருந்து புனேவுக்கு முதல் விமானம் திங்களன்று அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டது, அதே சமயத்தில் பாட்னாவுக்கு, மும்பையில் இருந்து முதல் விமானம் காலை 6.45 மணிக்கு கிளம்பியது.
மேற்கு வங்க மாநிலமும் ஆந்திராவும் தங்கள் விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகளை அனுமதிப்பதற்கு தயக்கம் காட்டியதையடுத்து திங்களன்று 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று (மே 26) முதல் ஆந்திராவில் விமானச் சேவைகள் தொடங்கியுள்ளதாகவும், எனவே விமானச் சேவைகள் அதிகரித்துள்ளதாகவும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
முன்பு, நேற்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்நாட்டு விமானச் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அங்கு மே 28 முதல் பயணிகள் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கும்.
அரசாங்கம் வழங்கிய ஆலோசனையின்படி, மே 28 முதல் மாநிலத்தில் உள்நாட்டு விமானங்கள் அனுமதிக்கப்பட்டவுடன் மேற்கு வங்கத்திற்கு வரும் மக்கள் கடந்த இரண்டு மாதங்களில் கோவிட் -19 பாதிப்பு இல்லை என்று சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தபின்னர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அனைத்துவித போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், விமானத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டது. இந்த நிலையில், வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் உள்நாட்டு விமான சேவைகளை மே 25 முதல் தொடங்குவதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.
அது போலவே, பயணச் சீட்டின் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. பயணிகள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டது, விமானத்தில் உணவுப் பொருட்கள் எதுவும் பரிமாறப்படவில்லை. அதோடு, ஆரோக்யா சேது செயலியின் மூலம் பயணிகள் மருத்துவ நிலைமைகள் குறித்த விவரங்கள் பெறப்பட்டது, அதோடு சுய பிரமாண பத்திரம் போன்ற அறிவிப்பு படிவத்தை நிரப்ப வேண்டுவதும் கட்டாயமாக்கப்பட்டது.