செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

Photo: Chief Minister Of Tamilnadu Official Twitter Page

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (28/07/2022) மாலை 05.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை (44th Chess Olympiad) இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் ஜூலை 28- ஆம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்திய நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் திரௌபதி முர்மு!

விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், இந்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து கலந்துக் கொண்டனர்.

சதுரங்க கரை பதித்த வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்றார். அதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டையில் விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படத்தை மணல் ஓவியத்தில் வரைந்து அசத்தினார் ஓவியர் சர்வம் படேல்.

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினார். அதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர், இளம் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றினர்.

திருச்சி, கோலாலம்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டதையொட்டி, இன்று காலை முதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், மகளிர் பிரிவில் அதிக புள்ளிகளைக் கொண்ட இந்திய மகளிர் அணி கருப்பு காய்களுடன் போட்டியைத் துவங்கும். ஓபன் பிரிவில் அதிக புள்ளிகளைக் கொண்ட அமெரிக்க அணி கருப்பு கைகளுடன் போட்டியைத் துவங்கும்.

இந்தியா, சிங்கப்பூர், ஜமைக்கா, அமெரிக்கா உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 1,500- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

‘இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யக் கூடிய நாடுகளின் பட்டியல்!’

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது. தமிழகத்திற்கும் சதுரங்க விளையாட்டிற்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். பல விளையாட்டுப் போட்டிகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன. இந்தியாவின் விளையாட்டு கலாசாரம் மேம்பட்டுள்ளது” என்றார்.