81 வயது தாத்தா வேடத்தில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்ல முயன்ற 32 வயது இளைஞர் கைது!!

Man Impersonates 81-Year-Old To Go To US, Busted At Delhi Airport

குஜராத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர் 81 வயது தாத்தா தோற்றத்தில் வெளிநாடு செல்ல முயன்ற நிலையில், டில்லி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடு செல்வதற்காக வயதான தோற்றத்தில் முதியவர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் வழக்கமான நடைமுறைப்படி பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது நடைஉடை பாவனைக்கும், அவரது வயதுக்கும் சம்பந்தம் இல்லாத நிலை தென்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை அறைக்குள் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அவரது குட்டு வெளிப்பட்டது. அவரது முதியவர் தோற்றம் கலைக்கப்பட்ட நிலையில், சுமார் 32 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, அந்த இளைஞர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் ஜெயேஷ் பட்டேல் என்பதும், அமெரிக்கா செல்ல விருப்பப்பட்ட ஜெயேஷ், அம்ரிக் சிங் என்ற 81 வயது முதியவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து, அவரைப் போன்றே வேடமிட்டு, நியூயார்க் செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது.

போலி பாஸ்போர்ட்டில் உள்ளவர் போல, வெள்ளை நிற டை, மூக்குக் கண்ணாடியுடன் உருவத்தை மாற்றிய இளைஞர், வயதான தாத்தா போல, வீல்சேர் மூலமே விமான நிலையத்திற்குள்ளும் வந்துள்ளார்.

இருந்தாலும், சோதனையின்போது அவரது நடவடிக்கைகளில் வித்தியாசம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக விசாரணை நடத்தியபோது, உருவ மாற்றம் குட்டு வெளிப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல் விசாரணைக்காக அவர் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து கூறிய டில்லி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி, ஜெயேஷ் பட்டேல் என்ற இளைஞர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், ஏர் இந்தியா விமானம் மூலம் அவர் விமானத்தில் செல்ல டிக்கெட் பதிவு செய்திருந்தார் என்றும் தெரிவித்தவர், அவரது ஆள் மாறாட்டத்துக்கான நோக்கம் என்ன என்பது தெரியவில்லை, அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.

மேலும், இதேபோன்ற வழக்கில், டெர்மினல் 3-ல் இருந்து கோலாலம்பூர் வழியாக புனோம் பென் நகருக்குச் செல்லப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சஃபி நூர்சாயை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில். “அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, அவர் பாகிஸ்தானுக்கு அடிக்கடி வருபவர் என்பது கண்டறியப்பட்டதாகவும், அவரிடம் நடத்திய சோதனையில், ஒரு போலி கனேடிய பாஸ்போர்ட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் டில்லி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.