ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் 32,000 பேர் – இந்திய தூதரகம் தகவல்

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து 32,000 இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்துள்ளனர்.

இது கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி உள்ள எண்ணிக்கை என்றும், மேலும் அது அதிகரிக்கக்கூடும் எனவும் இந்திய தூதரக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள ஊரடங்குக்கு மத்தியிலும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இந்தியா திரும்ப விரும்புவோருக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய தூதரகம் செய்துகொடுத்துள்ளது. அதன்படி நாடு திரும்ப விருப்பம் உடையவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான பிரத்யேக தளத்தை புதன்கிழமை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால் சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த தளம் செயல்படாமல் முடங்கியதால் இந்தியா திரும்ப விரும்புவோர் பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து அந்த கோளாறு சரி செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதுவரை 32,000-க்கும் மேற்பட்டோர் சொந்த வீடுகளுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர்.

இதில் பதிவு செய்யப்பட்ட வரிசையின் அடிப்படையில் அவர்களை இந்தியா அனுப்பி வைக்க முடியாது என்றும், கர்ப்பிணிகள், முதியவர்கள், மருத்துவ உதவியுடன் வாழ்ந்து வரும் நோயாளிகள், வாழ்வாதாரம் இல்லாத தொழிலாளர்கள் ஆகியோர் முன்னுரிமை அளிக்கப்பட்டு தாயகம் அனுப்பி வைக்கப்படுவர் எனவும் துபாயில் உள்ள இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேட்டியளித்துள்ள துபாய்க்கான இந்திய தூதரக அதிகாரி விபுல், ஏர் இந்தியா விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடும் என தாம் நம்புவதாகவும், கப்பல்களை இதற்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், பயணத்திற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டல் குறித்த தகவலை இந்திய அரசிடமிருந்து இன்னும் தாம் பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உலகம் முழுவதும் வசித்து வரும் மலையாளிகள் தங்கள் சொந்த மாநிலமான கேரளாவிற்கு திரும்ப விரும்புவதாக பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் நேற்றைய நிலவரப்படி மட்டும் 3,53,468 மலையாளிகள் கேரளா திரும்ப பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.