சென்னையில் 3 வயது சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த துயரமான சிசிடிவி காட்சி (வீடியோ)..!

சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று மாலை மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொண்டித்தோப்பில் வசித்து வந்தவர் கோபால். ராஜஸ்தானை சேர்ந்த இவர் அங்குள்ள ஸ்டீல் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

மனைவி சுமித்ரா, 3 வயது குழந்தை அபினேஷ் ஆகியோருடன் நேற்று காலை அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோபால் சென்றார்.

மாலையில் மனைவி குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கொருக்குப்பேட்டை பாரதி நகர் மேம்பாலத்தில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளின் முன்னால் மாஞ்சா கயிறு வந்து விழுந்தது.

இதனால் உஷாரான கோபால் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்குள் அது முன்னால் அமர்ந்திருந்த குழந்தை அபினேசின் கழுத்தில் சிக்கி அறுத்தது. இதில் அபினேசின் கழுத்தில் கத்தியால் அறுத்தது போல பெரிய வெட்டு காயம் இருந்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

இதைப்பார்த்து கோபாலும், அவரது மனைவி சுமித்ராவும் கூச்சல் போட்டு கதறினார்கள்.

உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கிச் சென்றனர். குழந்தையின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும், கோபாலும், சுமித்ராவும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஆஸ்பத்திரி முழுவதும் சோகம் நிலவியது.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன் ஆகியோரின் உத்தரவின் பேரில் மாஞ்சா நூல் காற்றாடி விட்டவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

கொருக்குப்பேட்டை பகுதியில் காற்றாடிவிட்டவர்கள் யார் – யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது கொருக்குப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த நாகராஜ் என்ற வாலிபரும், சாஸ்திரிநகரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனும் காற்றாடிவிட்டது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது காசிமேடு ஏ.ஜே. காலனியில் மளிகை கடையில் காற்றாடிகளை விற்பனை செய்த சார்லஸ் என்ற வியாபாரியும் கைது செய்யப்பட்டார்.