கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமைகள்; திருச்சி ஏர்போர்ட்டில் பறிமுதல்!

Money seized in Trichy Airport

திருச்சி விமான நிலையத்தில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2000 அரிய வகை ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருச்சி விமான நிலையத்துக்கு கோலாலம்பூரிலிருந்து இருந்து மலிண்டோ விமானம் நேற்று வந்தது.

அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பீர்முகமது முஸ்தபா என்பவர் அந்த விமானத்தில் இருந்து இறங்கி அவரின் உடைமைகளோடு நடந்து வந்துகொண்டிருந்தார்.

அவர் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரிடம் இருந்த உடமைகளை சோதனை செய்தனர்.
மேலும் விசாரித்தபோது முதலில் பேனா, பென்சில் உள்ளிட்டவைகளை எடுத்து வருவதாக கூறினார்.

அவர் சீனாவிலிருந்து கோலாம்பூர் வழியாக திருச்சி வந்ததும் தெரிய வந்தது. சோதனையின்போது 8 அட்டை பெட்டியில் உயிரோடு இருக்கக்கூடிய 2,000 அரிய வகை ஆமைகளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.

வனத்துறையினர் அந்த ஆமைகளை ஆய்வு செய்தபோது அவை சீனாவில் வளரக்கூடிய அரிய வகை ஆமைகள் என்பதும், அவற்றை சீனாவில் இருந்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 2,000 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த பீர்முகமது முஸ்தபாவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவை நமது நாட்டின் சீதோஷண நிலைக்கு இந்த ஆமைகள் ஏற்றதல்ல என்பதால் அவைகள் சீன நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.