இந்திய நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் திரௌபதி முர்மு!

Photo: SANSAD TV

இந்திய நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார்.

விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஆகாஷா ஏர்!

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (25/07/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற விழாவில், இந்திய நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக வருகை தந்து பதவியேற்றார்.

விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ.க. தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

‘திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக புரூணைக்கு விமான சேவை’- ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு!

விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “தம்மைத் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. குடியரசுத் தலைவராகப் பதவியேற்றது பெருமையளிக்கிறது. அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். இந்திய நாட்டு மக்களின் வளமான எதிர்க்காலத்திற்காகப் பணியாற்றுவேன். சாதாரண கவுன்சிலராகத் தொடங்கி, குடியரசுத் தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம்.

ஏழை வீட்டில் பிறந்த மகள் நான், குடியரசுத் தலைவராக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தி. பெண்கள், இளைஞர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்துவேன். எனது குடியரசுத் தலைவர் பொறுப்பு, பெண்களின் கனவுகளுக்கான திறவுக் கோலாக இருக்கும். கொரோனா காலத்தில் உலகத்திற்கே இந்தியா பெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்தது” எனக் கூறியுள்ளார்.