பிரிட்டனில் டிசம்பர் 12-ம் தேதி நடந்த தேர்தல் வாக்குப்பதிவுகளின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அங்கு மொத்தமுள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களையும் தொழிலாளர் கட்சி 203 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
மீதமுள்ள இடங்களில் ஸ்காடிஸ் தேசிய கட்சி 48, தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11, டெமாக்ரடிக் யுனியனிஸ்ட் கட்சி 8 மற்றும் பிற கட்சிகள் 15 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் 1935-ம் ஆண்டுக்குப் பிறகு, தொழிலாளர் கட்சி மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், இதே பிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்று அந்நாட்டு நாடாளுமன்றத்துக்குள் சென்றுள்ளனர். இவர்களில் கோயன் மொஹிந்த்ரா, கிளாரி கௌடின்ஹோ மற்றும் நவேந்திர மிஸ்ரா ஆகிய 3 பேரைத் தவிர, மீதமுள்ள அனைவரும் ஏற்கெனவே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள்.
இவர்கள் அனைவரும் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்களின் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.