கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. அதன்படி திருச்சி விமான நிலையத்தில் இருந்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை திருப்பி அழைத்துவர மே 7ம் தேதி “வந்தே பாரத்” திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் சனிக்கிழமை தொடங்கியது.
இதற்காக 40 நாடுகளுக்கு 149 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன்கீழ் திருச்சியில் இருந்து சென்னை வழியாக மலேசியாவுக்கு சிறப்பு விமானத்தில் 111 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகள் மீண்டும் தங்களது நாட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மூன்று சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு ஏராளமானோர் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் மலேசிய பயணிகளை அழைத்துச் செல்வதற்காக சிறப்பு மலிண்டோ விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.
திருச்சியில் இருந்து 111 மலேசிய பயணிகள் மற்றும் உணவு பொருட்களையும் ஏற்றிக்கொண்டு அந்த விமானம் காலை 11 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து 78 பயணிகளையும் ஏற்றிக்கொண்டு அந்த விமானம் நேற்று இரவு மலேசியாவுக்கு சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய மற்றும் தமிழக அரசின் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். அதன் பின்னரே அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதித்தனர்.