கொரோனா தாக்கத்தால் இந்தியாவிற்கு ரூ.10 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு!

கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக இந்தியா 10 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பினை சந்தித்து வருவதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த புதன் கிழமையன்று, இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று நோயின் காரணமாக இந்தியா 10 லட்சம் கோடி வருவாயினை இழக்கும். சில மாநிலங்களில் சம்பளம் கொடுக்க கூட முடியாத அளவுக்கு நிலைமை மிகவும் மோசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் குறையும் என்று எஸ் அண்ட் பி குளோபல் மதிப்பீடுகள் கணித்துள்ளது. எவ்வாறயினும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2021 – 22ம் ஆண்டில் 8.5 சதவீதமாகவும், இதே 2020 – 23ம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.

பல வாரங்களாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட நிதி இழப்பினை கட்டுப்படுத்த, அரசு மீண்டும் பொருளாதாரத்தினை திறக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும் அது அவ்வளவாக கைகொடுக்கவில்லை. ஏனெனில் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்த, பல மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதன் காரணமாக இந்தியாவின் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கின்றன.

கடந்த புதன்கிழமையன்று மட்டும் 9,985 பேருக்கு கொரோனாவின் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா முழுக்க கொரோனாவின் தாக்கம் 2,98,283- ஐ தொட்டுள்ளது. இதே பலி எண்ணிக்கையும் 8,501 பேராக அதிகரித்துள்ளது. இதே தமிழக்கத்தினை எடுத்துக் கொண்டால் 36,841 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, பலி எண்ணிக்கை 326 பேராக அதிகரித்துள்ளது.

“இதனால் இந்திய அரசாங்கத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 200 லட்சம் கோடி ரூபாயாகும். அதில் 10 சதவீதம் ஊக்கத்தொகையாக சென்றுள்ளது. சுமார் 20 லட்சம் கோடி ஊக்கத் தொகை தொழில்களுக்கு, விவசாயிகளுக்கும் ஒரு ஊக்கத் தொகையினை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. எனினும் இன்னும் 10 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிலைமையை நேர்மறையுடன் கையாள வேண்டும். இது நாம் எதிர்கொள்ளும் கடினமான நேரம். நாங்கள் ஒரு நெருக்கடியான நேரத்தினை எதிர்கொண்டுள்ளோம். எனினும் நாம் அதனை எதிர்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடனும், நேர்மறையுடனும் எதிர்த்து போராட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.